சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 7 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி அதிமுகவின் எடப்பாடி கோஷ்டியினர் பொதுக்குழுவை கூட்டினர். அப்பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது.
அதே நாளில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி கோஷ்டிக்கு எதிரணியான ஓ.பன்னீர்செல்வம் தமது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது எடப்பாடி கோஷ்டியினருக்கும் ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இருதரப்பும் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதல் சிலரது மண்டையும் உடைந்தது.ஒருகட்டத்தில் அதிமுக தலைமை அலுவலகம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வசமானது. இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உள்ளே நுழைந்தனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் ராயப்பேட்டை பகுதியே போர்க்களமானது.
பின்னர் பொதுக்குழு கூட்டம் முடிந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி கோஷ்டியினர் சென்றனர். அங்கு அறைகளில் இருந்த ஆவணங்கள் சிதறி கிடந்தன. இதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை போலீசில் அதிமுக எடப்பாடி கோஷ்டியின் சிவி சண்முகம் ஒரு புகார் கொடுத்தார். அதில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவி சண்முகம் தரப்பு ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. அதில் அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான விசாரணையை சிபிஐ அல்லது வேறு அமைப்பு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்ற போது, அதிமுக அலுவலக வன்முறை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன்பின்னர் தற்போது அதிமுக தலைமை அலுவக வன்முறை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 7 பேர் மீது பயங்கர ஆயுதங்களுடன் கலகம் செய்ய செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் 7 பிரிவுகளின் கீழ் சென்னை ராயப்பேட்டை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.