தமிழகத்திலுள்ள 33 ஆயிரத்து 841 கூட்டுறவு ரேஷன் கடைகளிலும், பணமற்ற பரிவர்த்தனை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென்று, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உறுதியளித்துள்ளார்.தமிழகம் முழுவதும், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன.
இவற்றில், காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியைத் தவிர்த்து, மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும், யு.பி.ஐ.,வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த வாரத்தில், காஞ்சிபுரம் வங்கியிலும் இந்த வசதி துவக்கப்பட்டது. இதன் மூலமாக, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், யு.பி.ஐ.,வசதி பெற்றுள்ளன. இந்த வங்கிகள் மற்றும் அதன், 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் பயன் அடைவார்கள்.இதனால், தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக, வங்கிச் சேவைகளை அளிப்பதில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும், முழுத்திறனையும் பெற்றுள்ளன.இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும், NEFT மற்றும் RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும். தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் வரலாற்றில், இது ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.அடுத்ததாக, அனைத்து ரேஷன் கடைகளிலும் பணமற்ற பரிவர்த்தனை செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 ரேஷன் கடைகள், கூட்டுறவு மருந்தகங்கள், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலை உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும், பணமற்ற பரிவர்த்தனை சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து 33,841 கூட்டுறவு ரேஷன் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்க்களிலும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உறுதியளித்தார்..