கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் சுதாகரனிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 -ஆம் ஆண்டில் காவலாளியை கொலை செய்துவிட்டு உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்தனர். இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பெயரில் சி.பி.சி. ஐ. டி போலீசார் பலருக்கு சமன் அனுப்பி கோவை காந்திபுரம் சி.பி.சி. ஐ .டி அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி இதுவரை 250க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனும் ,சசிகலாவின் உறவினருமான சுதாகரன் நேற்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.சி. ஐ. டி போலீசார் சமன் அனுப்பினர். அதன்படி சுதாகரன் நேற்று கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி. ஐ. டி அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜரானார் .அவரிடம் பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டனர். அந்த கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார் .குறிப்பாக கோடநாடு எஸ்டேட்டில் என்னென்ன ஆவணங்கள் இருந்தன? அதில் எவை எல்லாம் கொள்ளடிக்கப்பட்டுள்ளது? என்பது உட்பட 40 கேள்விகளை சிபிசிஐடி போலீசார் கேட்டனர் .அந்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணையை முடித்துவிட்டு சுதாகரன் வெளியே வந்தார் .அவரிடம் மொத்த ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சுதாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சி.பி.சி. ஐ. டி போலீசார் என்னிடம் மொத்தம் 40 கேள்விகள் கேட்டனர். அந்த கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த உண்மையை நான் கூறினேன். போலீசாரின் விசாரணை நன்றாக இருந்தது. தற்போது தான் நான் முதல் முறையாக விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறேன். இந்த விசாரணை தீவிரம் அடைந்து உள்ளதா? உண்மை வெளிவருமா ? என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது இவ்வாறு அவர் கூறினார். சுதாகரனிடம் விசாரணை முறையாக நடக்கிறதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு இந்த கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது. இதை கேட்கவேண்டிய இடத்தில் தான் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இது குறித்து போலீசார் கூறியதாவது:- ஐகோர்ட்டு அனுமதியின் பேரில் சுதாகரனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக ஓய்வு பெற்ற பாதுகாவலர் திருமலைசாமியிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். என்றனர்.