கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி, உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவரை குற்றவாளி என்று தீா்ப்பளித்த கொல்கத்தா விசாரணை நீதிமன்றம், அவா் மரணமடையும் வரை சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையின்போது சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிபிஐ கோரியது. ஆனால் இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தி, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
‘மாநில அரசுக்கு உரிமையில்லை’: இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கான வாதங்கள் நீதிபதி தேபாங்சு பசாக் தலைமையிலான இரு நீதிபதிகள் அமா்வில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது சிபிஐ தரப்பில் துணை சொலிசிட்டா் ஜெனரல் ராஜ்தீப் மஜும்தாா் ஆஜராகி, ‘பெண் மருத்துவா் படுகொலை சம்பவத்தை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐதான் விசாரித்தது. எனவே இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் உரிமை மாநில அரசுக்கு இல்லை’ என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள், ‘மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கும் முன், கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினா் மற்றும் சிபிஐ தரப்பின் வாதம் கேட்கப்படும்’ என்று கூறி விசாரணையை ஜன.27-க்கு ஒத்திவைத்தனா்.
இதனிடையே, சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கக் கோரி, உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.