நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக அதிகமுறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை அவர் பெறவுள்ளார்.
2024 மத்திய இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக முழுமையாக பட்ஜெட் ஆக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக பதவி ஏற்றுள்ள நிலையில், தற்போது 2024-25ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் வரும் 23ம்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக அதிகமுறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை அவர் பெறவுள்ளார். இதற்கு முன்னதாக மொரார்ஜி தேசாய் 6 முறை தொடர்ச்சியாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ததே அதிகபட்சமாகும்.
தேர்தலுக்கு பிந்தைய பட்ஜெட் என்பதுடன், நடைபெற்றுமுடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் இடங்களை முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில், தற்போது குறைந்திருப்பதால், இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது. பாஜகவின் தேர்தல் சறுக்கலுக்கு நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைப்பின்மை அதிகரிப்பு காரணமாக சொல்லப்படும் நிலையில், வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.