ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். நேற்று காலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விடிய விடிய நடைபெற்ற விசாரணை இன்று அதிகாலை 3.15 மணி வரை நீடித்தது. பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு, நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து ராஜமுந்திரிக்கு காரில் அழைத்து
செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவை போலீசார் அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக சிறை அருகே இருக்கும் அரசு மருத்துவமனையில் அவருடைய உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை போலீசார் நடைமுறைகளை பின்பற்றி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு ஜாமீன் வழங்க கோரி அவருடைய வக்கீல்
விஜயவாடா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சந்திரபாபு நாயுடு தரப்பு வக்கீல் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ரத்து செய்த நீதிமன்றம் அவருடைய பொது வாழ்க்கை, வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுகளை வழங்கவும், மருந்து மாத்திரைகளை அனுமதிக்கவும், சிறையில் தனி அறை ஒதுக்கீடு செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் நேற்று சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவிற்கு சிறை
நிர்வாகம் விசாரணை கைதியின் 7691ஐ ஒதுக்கீடு செய்துள்ளது. சந்திரபாபு நாயுடு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தெலுங்கு தேசம் கட்சி மாநில தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஜனசேன, பாரதிய ஜனதா
ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே ஆந்திர மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.