மசூதிக்குள் “ஜெய் ஸ்ரீராம்” கோஷம் போடுவது மத நம்பிக்கையை புண்படுத்தாது – கர்நாடகா ஹைகோர்ட் தீர்ப்பு.!!

பெங்களூர்: இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலமான மசூதிக்குள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையை புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், மசூதியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டது தொடர்பாக 2 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் கர்நாடக ஹைகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கர்நாடகாவின் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில், 2 நபர்கள் இரவு சுமார் 10.50 மணியளவில் நுழைந்து, “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டதாகவும், மதரீதியாக அச்சுறுத்தம் வகையில் பேசியதாகவும் காவல்துறையில் புகார் தரப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.. மத உணர்வுகளை புண்படுத்துதல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மசூதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணையையும் துவங்கினர்.

இந்த வீடியோ ஆதாரங்களை வைத்து, அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தன் குமார், சச்சன் குமார் என்ற 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.. இதனால், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று, குற்றம்சாட்டப்பட்டவர்கள், கர்நாடக ஹைகோர்ட்டை நாடினார்கள்..

இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “பிரிவு 295A என்பது தீங்கிழைக்கும் நோக்கில் எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் வேண்டுமென்றே அவமதிப்பதற்காக பதியப்படுவது. “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிடுவது எப்படி மத உணர்வுகளை புண்படுத்தும் என்று புரியவில்லை.

அந்த பகுதியில் இந்துக்களும் முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதாக புகார்தாரரே தெரிவித்திருக்கிறார். எனவே, இந்த சம்பவம் மோதலை ஏற்படுத்தும் என்று சொல்வதில் உண்மை இருக்கமுடியாது.

295A பிரிவின் கீழ் எந்தவொரு செயலும் குற்றமாக மாறாது என்று சுப்ரீம் கோர்ட்டும் கூறுகிறது. அமைதியை கொண்டுவருவதிலோ அல்லது பொது ஒழுங்கை சீர்குலைப்பதிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத செயல்கள் 295A பிரிவின் கீழ் குற்றத்திற்கு வழிவகுக்காது… குற்றத்தின் மூலப்பொருளை கண்டறியாமல், மனுதாரர்களுக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது துஷ்பிரயோகமாகும்.. அது தவறான நீதிக்கும் வழிவகுத்துவிடும்” என்று தீர்ப்பளித்தார்  மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும் என்று தன்னுடைய உத்தரவில் கூறியி நீதிபதி, இது தொடர்பான மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.