கோவை விமான நிலையத்துக்கு துப்பாக்கியுடன் வந்த சென்னை தொழில் அதிபர் – போலீசார் விசாரணை..!

சென்னை அருகே உள்ள மாங்காட்டைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40) தொழில் அதிபர். இவர் சென்னையில் இருந்து தனது கேரவனில் கோவை வந்துள்ளார் .இங்கு கேரவனை சர்வீஸுக்கு விட்டு விட்டு விமானத்தில் சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது சக்திவேல் வைத்திருந்த பையில் 2 குண்டுகளுடன் கை துப்பாக்கிக் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் .அவர்கள் விசாரணை நடத்தினார்கள். -இது குறித்த தகவலின் பேரில் பீளமேடு போலீசார் விரைந்து வந்து கை துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சக்திவேலிடம் விசாரணை நடத்திய போது விமான நிலையத்திற்கு அவசரமாக கிளம்பும்போது தனது பையில் துப்பாக்கி வைத்திருந்தததை கவனிக்காமல் எடுத்து வந்து விட்டதாக கூறினார். உடனே அவரது துப்பாக்கியின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இதில் அவர் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனால் அவரிடம் துப்பாக்கியை போலீசார் மீண்டும் ஒப்படைத்தனர். இதனால் சக்திவேல் அந்த விமானத்தில் பயணம் செய்ய முடியவில்லை. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:விமான நிலையத்துக்கு துப்பாக்கி, கத்தி, போன்ற ஆயுதங்கள் எடுத்துவரக் கூடாது. லைசன்ஸ் இருந்தாலும் விமானங்களில் பயணம் செய்யும்போது துப்பாக்கி கொண்டு செல்ல தடை உள்ளது .விமான பயணத்துக்கு திட்டமிடும்போது துப்பாக்கியை மறக்காமல் வீடுகளில் வைத்து விட்டு வர வேண்டும் என்று கூறினார்கள்..