ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு வார்த்தை..!

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்தித்து, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு வருகின்றன. கடந்த செப். 3-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ வந்தடைந்த முதலமைச்சருக்கு தமிழ் சங்கங்கள் உற்சாக வரவேற்பளித்தன.

சிகாகோவில், BNY மெலன் (The Bank of New York Mellon Corporation) வங்கியின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அதேபோல், சிகாகோவில் ஈட்டன் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், சென்னையில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நேற்று (செப். 10) ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், ‘ஃபோர்டு மோட்டார்ஸ் குழுவுடன் மிகவும் ஈடுபாட்டுடன் விவாதம் நடைபெற்றது. தமிழ்நாட்டுடன் ஃபோர்டின் மூன்று தசாப்த கால கூட்டாண்மையை புதுப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டது’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.