சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் திருவண்ணாமலையில் பௌர்ணமி நாட்களில் 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் மலைபாதைகளில் கிரிவலம் செல்வர்.
அந்த வகையில் சித்திரை மாதத்தில் வருகிற சித்ரா பவுர்ணமி நேற்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி, இன்றிரவு 11.59 மணிக்கு முடிவடைகிறது. இதனால், நேற்று மாலை முதலே, பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர். சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
முன்னதாக சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக 1000 பேருந்துகளும், சென்னை ,கும்பகோணம், சேலம், கோவை, மதுரை ஆகிய போக்குவரத்து கழகங்களின் சார்பில் 1700 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது.