கோவை சிங்காநல்லூர், நீலி கோணாம்பாளையம், தேவேந்திர வீதியை சேர்ந்தவர் முத்துராஜ் ( வயது 44) இவர் அங்குள்ள ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார் .மேலும் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் வசதியும் செய்து கொடுத்து வருகிறார். இவரது உறவினர் சந்திரன் என்பவர் தீபாவளி முன்னிட்டு நீலி கோணாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பட்டாசு கடை நடத்தினார் .இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துராஜ் பட்டாசு கடைக்கு பட்டாசு வாங்க சென்றிருந்தார். அப்போது கடையில் கூட்டமாக இருந்ததால் அங்கு நின்று கொண்டிருந்த 5 பேர் பட்டாசு கடையில் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதை பார்த்தார். அப்போது முத்துராஜ் மற்றும் அவரது உறவினர் திவாகர் ஆகிய இருவரும் சேர்ந்து அவர்களிடம் சமரசம் செய்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முத்திய நிலையில் அவர்கள் 5 பேரும் சேர்ந்து தாக்கினார்கள். இதில் திவாகர் படுகாயம் அடைந்தார் . முத்துராஜுக்கு கத்தி குத்து விழுந்தது. இதை தொடர்ந்து 5 பேரும் பட்டாசு கடையில் இருந்த பட்டாசு பெட்டிகள் மற்றும் ரூ 10 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். காயமடைந்த முத்துராஜ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தகராறில் ஈடுபட்ட 5 பேரை சிறிது நேரத்தில் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், அருண்குமார், சரண், ராஜேஷ்குமார் ,சுஜித் என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து பணமும் பட்டாசு பெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
பட்டாசு கடையில் மோதல்… வியாபாரிக்கு கத்திக்குத்து : பணம், பட்டாசுகள் கொள்ளை- 5 பேர் கைது.!!
