இரு தரப்பினரிடையே மோதல்: இருவர் படுகாயம் – இருவர் கைது
கோவை கண்ணப்பன் நகர் பகுதியில் நேற்று மாலை இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய பாரத்சேனா அமைப்பை சேர்ந்த படையப்பா மற்றும் நந்தபிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை, கண்ணப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜபருல்லா. இவர் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகியாக இருந்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதி இந்து முன்னணியை சேர்ந்த விக்னேஸ், பாரத் சேனா அமைப்பை சேர்ந்த படையப்பா, நந்த பிரகாஷ் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்து அமைப்பை சேர்ந்த மூவரும்,
எஸ்.டி.பி.ஐ அமைப்பைச் சேர்ந்த ஜபருல்லாவை தாக்கினர். ஜபருல்லாவின் இரு சக்கர வாகனமும் சேதப்படுத்தபட்டது. ஜபருல்லாவும் இந்து அமைப்பினரை தாக்கியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து இந்து முன்னணியை சேர்ந்த விக்னேஷும், எஸ்.டி.பி.ஐ ஐபருல்லாவும் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ரத்தினபுரி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது,
ஜபருல்லா கொடுத்த புகாரின் பெயரில் இந்து முன்னணியைச் சேர்ந்த படையப்பா, விக்னேஸ், நந்த பிரகாஷ் ஆகியோர் மீது கொலை முயற்சி , கொலை மிரட்டல் , ஆயுதங்களால் காயம் ஏற்படுத்தல், ஆபாசமாக பேசுதல், பொது சொத்துக்களை சேதம் விளைவித்தல் ஆகிய 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல இந்து முன்னணியைச் சேர்ந்த விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் , எஸ்.டி.பி.ஐ அமைப்பை சேர்ந்த ஜபருல்லா மீது கொலை மிரட்டல் , காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில்
ஜபருல்லா கொடுத்த புகாரின் பெயரில் பாரத் சேனாவை சேர்ந்த படையப்பா, நந்த பிரகாஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.