ஹிமாசல், உத்தரகண்ட்டில் மேக வெடிப்பு: 13 பேர் உயிரிழப்பு- 50 பேர் மாயம்.!!

ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பால் 13 பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹிமாசல், சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் 36 பேர் அடித்துச் சென்றுள்ளனர். அதேபோல், மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு மேக வெடிப்பு சம்பவத்திலும் 10 பேர் மாயமாகியுள்ளனர். அதில், இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.ஆற்றில் அடித்துச்சென்றவர்களை தேடும் பணியில்..

உத்தரகண்டில் தெஹ்ரி, ஹரித்வார், ரூர்க்கி, சமோலி, டேராடூன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தெஹ்ரி மாவட்டம் ஞானசாலியில் வீடு இடிந்த விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சார்தாம் யாத்திரை செல்பவர்கள் பயன்படுத்தும் முக்கிய பாலம் இந்த கனமழையால் சேதமடைந்துள்ளன.

கனமழையால் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேகவெடிப்பால் சாலையில் ஏற்பட்ட பள்ளம்

கடும் மழைக்கு மத்தியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேகவெடிப்பால் சாலைகளில் பெரிய அளவில் பள்ளமும், விரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உத்தரகண்ட் முதல்வர் புஸ்கர் சிங் தாமி நேரில் பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.சமேஜ் காட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

இந்திய – திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங்கை தொடர்பு கொண்டு பேசிய ஜெ.பி.நட்டா, மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.