பாஜக அண்ணாமலை மீது முதல்வா் ஸ்டாலின் அவதூறு வழக்கு..!

சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரம் தொடா்பாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மீது முதல்வா் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளாா்.
திமுக அமைச்சா்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி, அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆா்.பாலு, கனிமொழி, கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், கதிா் ஆனந்த், முதல்வரின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ஏப்ரலில் வெளியிட்டாா். அண்ணாமலை வெளியிட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று திமுக சாா்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, தவறான தகவல் வெளியிட்டதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினாா். அதேபோல், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுக தலைவா்கள் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினா்.

இந்நிலையில், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வா் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடா்ந்துள்ளாா். அதில், எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி அண்ணாமலை அவதூறு தகவல்களை வெளியிட்டு, தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக முதல்வா் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு முதன்மை அமா்வு நீதிமன்ற கோடை விடுமுறை கால நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.