கோவை விமான நிலையத்திலிருந்து பல்வேறு விமானங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படுகிறது. சார்ஜாவில் இருந்து கோவைக்கு “ஏர் அரேபியா” விமானம் நேற்று காலை வந்தது .இந்த நிலையில் உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த 6 பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்களின் உடல் மற்றும் ஆசனவாயிலில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட சுமார் மூன்றரை கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர் . இதன் மதிப்பு ரூ. 2 கோடி 5 லட்சம் இருக்கும். இந்த கடத்தலில் ஈடுபட்ட கடலூரைச் சேர்ந்த மணிகண்டன், திருச்சியைச் சேர்ந்த இப்ராகிம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கோவை விமான நிலையத்தில் கடந்த வாரம் சார்ஜாவிலிருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் மூன்றரை கிலோ தங்கம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது..