கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில்
கோவை மாவட்ட சுற்று பகுதியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரித்ததில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் அல்லாத நபர்களைப் பிடித்து விசாரித்ததில் கஞ்சா மற்றும் குற்ற செயலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்சியாக நேற்று தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிலான தனிப்படையினர் தடாகம் உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் காவலர்கள் வீரமணி, பாலசுப்பிரமணி அடங்கிய குழுவினர் தடாகம் கணுவாய் பகுதியிலுள்ள கோழிப்பண்ணை சந்திப்பு அருகே சோதனை நடத்தினர்.அப்போது மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த ராகுல் என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 2.5 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களின் விவரங்களையும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் மற்ற நபர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் மேற்கொண்டு இதுபோன்ற கல்லூரி மாணவர்களுக்கிடையான கஞ்சா போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவை மாவட்ட காவல்துறையானது செயல்படும் என காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது..