கோவை மாவட்டம் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி ,கவுரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது . அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கீர்த்தி வாசன் இன்ஸ்பெக்டர் மணி குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டது கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரது மகள் சுப்புலட்சுமி ( வயது 20 )என்பதும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் வாலிபர் ஒருவர் மாணவியை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. முதல் கட்ட விசாரணையில் கொலை நடந்த வீட்டில் சுஜி ( வயது 27) என்பவர் வசித்து வந்ததும் அவர் மாணவியை கொலை செய்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது..இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர். இதற்கிடையில் சுஜய்க்கும் பாலக்காட்டை சேர்ந்த ரேஷ்மா (வயது 25) என்பவருக்கும் திருமணம் நடந்தது . இந்த நிலையில் மாணவியை சுஜய் காதலித்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இருக்கலாம் .இதனால் அந்த மாணவி பொள்ளாச்சியில் சுஜய் தங்கியிருந்த வீட்டிற்கு பேக்குடன் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சுப்புலட்சுமி வயிற்றில் 9 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது. இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சுப்புலட்சுமியின் காதலன் சுஜய்யை தேடி வருகிறார்கள்.இந்தக் கொலையில் கொலை அணிகளை பிடிக்க டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் சப் இன்ஸ்பெக்டர்கள் திருமலைச்சாமி கணேசமூர்த்தி நாகராஜ் ஆகியோர் கொண்ட 3 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் விசாரணையில் இந்த கொலை நடந்த போது சுஜய்யின் மனைவி ரேஷ்மாவும் உடன் இருந்ததாக தெரிகிறது. மேலும் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது குறித்து சுஜய்யின் தாய் கொடுத்த தகவலுக்கு பிறகு தான் போலீசுக்கு தெரியவந்தது அவரிடம் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் ரேஷ்மாவுக்கும் தொடர்பு இருக்கலாம் எந்த சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று காலையில் பாலக்காடு அருகே பதுங்கி இருந்த சுஜய், ரேஷ்மா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அவர்களை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடந்து வருகிறது.