கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் அன்னூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் அன்னூரில் உள்ள தனியார் பத்திர எழுத்தரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன். பத்திரப்பதிவு தொடர்பாக அன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன். அப்போது அங்கு இளநிலை உதவியாளராக வேலை பார்த்துவந்த சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 32) என்பதுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.அவர் அன்னூர் கட்டபொம்மன் நகரில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 20 22 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் என்னை செல்போன் மூலமாக இளநிலை உதவியாளர் பிரபாகரன் தொடர்பு கொண்டார். அப்போது அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் ,சாப்பாடு வாங்கி கொடுக்குமாறு கேட்டார். நானும் சாப்பாடு வாங்கிக் கொண்டு அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றேன் அப்போது அவர் என்னை வீட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அத்துடன் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இந்த நிலையில் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது .இதனால் தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றேன் .அங்கு என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் நான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இது எனக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது குறித்து என்னை பாலியல் பலாத்காரம் செய்த இளநிலை உதவியாளருக்கு தகவல் தெரிவித்தேன் .அவர் கருவை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார் .எனவே என்னை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய இளநிலைஉதவியாளர் பிரபாகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். இளம் பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் இளநிலை உதவியாளர் பிரபாகரன் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.தற்போது அவர் அன்னூரில் இருந்து பணிமாற்றம் செய்யப்பட்டு கோவையில் உள்ள பத்திர பதிவு அலுவலக பணியாற்றி வருவதும், பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விவரமும் தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரன் நேற்று கைது செய்யப்பட்டார்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.