கோவை துடியலூர் அருகே உள்ள கவுண்டர் மில்ஸ், கே.கே. நகர், 3 -வது வீதியை சேர்ந்தவர் நந்தகுமார் ( வய து 40) இன்ஜினியர். இவர் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது .அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் தனது குடும்பத்துடன் நல்லாம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். பின்னர் உடல்நிலை சரியானதும் தனது குடும்பத்துடன் கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று முன்தினம் காலையில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவபட்டிருந்தது. பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்து தங்க மோதிரம், கொலுசு, வெள்ளி பொருட்கள், ரேடார் கைகடிகாரம் மற்றும் ரூ. 75 ரொக்க பணம் ஆகியவற்றை காணவில்லை. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும். இது குறித்து நந்தகுமார் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.போலீஸ் துப்பறியும் நாய் வீட்டில் மோப்பம் பிடிக்க கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி உள்ளனர்.போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது..