கோவை நகை வியாபாரியிடம் போலி நகைகளை கொடுத்து 1 கிலோ தங்கம் மோசடி..! கோவை பெரிய கடை வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் நகை வியாபாரி இவர் பெங்களூருவில் உள்ள நகைக்கடையை சேர்ந்த சுனில் ( வயது 50) என்பவரிடம் தொழில் ரீதியாக பழக்கம் வைத்திருந்தார்.அவரிடம் தங்க நகை மற்றும் தங்கக் கட்டிகளை கொடுத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுனில் கோவை வந்தார். அப்போது சுனில் தான் வைத்திருந்த 965 கிராம் எடை கொண்ட நகைகளை தியாகராஜனிடம் கொடுத்தார் .அந்த நகைகளுக்கு பதிலாக தியாகராஜன் 1 கிலோ 3 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகளை கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்ட சுனில் மீதி உள்ள தங்கத்திற்குரிய பணத்தை சிறிது நேரத்தில் கொண்டு வந்து தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சுனில் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தியாகராஜன் தன்னிடம் சுனில் கொடுத்த நகைகளை பரிசோதனை செய்தார் .அப்போது அவர் கொடுத்துச் சென்ற 965 கிராம் நகைகள் போலியானது என்பதும் அவர் தன்னை மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து தியாகராஜன் சுனிலின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டது அறிந்த அவர் இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சுனில் மீது மோசடி, நம்பிக்கை மோசடிஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.