கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும், மாணவியும் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோவில் பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ரவிக்குமார் அந்த வழியாக ரோந்து சுற்றி வந்தார் . அவர் அந்த மாணவன் மாணவியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் அந்த மாணவன் மற்றும் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி உள்ளார். இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். பிறகு போலீஸ்காரர் ரவிக்குமார் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு நான் சொல்லும் இடத்துக்கு வர வேண்டும். இல்லை என்றால் கைது செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அந்த மாணவியும் அவர் கூறிய இடத்துக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியிடம் போலீஸ்காரர் ரவிக்குமார் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் அவர் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது .இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் போலீஸ்காரர் ரவிக்குமார் மீது போலீசில் புகார் செய்தனர் . அதன் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் . இதில் போலீஸ்காரர் ரவிக்குமார் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து ரவி குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடு புகார்கள் வந்தன. இதனால் அவர் பீளமேடு போலீஸ் நிலையத்திலிருந்து கோவில்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.போலீஸ்காரர் ரவிக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வேலியே பயிரை மேய்ந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..