கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார் . அதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் வெள்ளியங்காட்டை சேர்ந்த முரளிதரன். இவர்கள் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது . இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதை அறிந்து தமிழக அரசின் குழந்தை பாதுகாப்பு அவசர எண்ணுக்கு தொடர்ப கொண்டு பெற்றோர்கள் புகார் செய்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுக்கப்பட்டது. அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்புக்காக அலுவலர் மதியழகன் கல்பனா, ஸ்ரீதர் மற்றும் சரவணம்பட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பிளஸ் 2 படிக்கும் மாணவிகள் பலருக்கும் பள்ளியின் நிர்வாக அதிகாரி விஜயகுமார்,உடற்பயிற்சி ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அவர்கள் இது பற்றி வெளியே கூறினால் உங்களைப் பற்றி பெற்றோரிடம் தவறாக கூறி விடுவோம் என்று மாணவிகளை மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பள்ளியின் நிர்வாக அதிகாரி விஜயகுமார் மற்றும் விளையாட்டு ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் நேற்று கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.