நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் 4 ஆண்டிற்கு முன் கொள்ளை நடந்தது. இதை தடுக்க முயன்ற எஸ்டேட் செக்யூரிட்டி கொலை செய்யப்பட்டார். எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் சயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை 230க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்தனர். நேற்று மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சுதாகர் தலைமையிலான போலீசார் மணல் சப்ளையர் ஓ.ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமார் (48) என்பவரிடம் விசாரணை நடத்தினர். கோவை போலீஸ் பயிற்சி மைய வளாகத்தில் இந்த விசாரணை நடந்தது.
ஓ.ஆறுமுகசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது குவாரிகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தம் பெற்றிருந்தார். மணல் தொழிலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். மணல் சப்ளைக்கு பின்னர் ஓ.ஆறுமுகசாமியின் சொத்துக்கள் பல மடங்கு பெருகியது. இதை தொடர்ந்து ஆறுமுகசாமி தனது மகன் செந்தில் பெயரில் ‘செந்தில் குரூப் ஆப் கம்பெனி’ என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை துவக்கினார். கிரீன் பவர், பேப்பர், சிமென்ட், புட் புராடக்ட், சினிமா தியேட்டர், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகின்றனர். அறக்கட்டளை துவக்கி அதன் மூலமாக ஏழை மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாயில் கல்வி, மருத்துவ உதவி தொகைகளை வழங்கினர். மணல் சப்ளை கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, உதவிதொகை வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில் போலீசார் கொடநாடு வழக்கில் விசாரணை வளையத்திற்குள் செந்தில்குமாரை கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடநாடு கொலை நடந்த 2017ம் ஆண்டு சென்னை சிஐடி காலனி ஷைலி நிவாஸ் அபார்ட்மென்ட்டில் செந்தில் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன . அதன் அடிப்படையில் செந்தில்குமாரை விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
போலீசார் செந்தில்குமாரிடம், ‘‘கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் குறித்து தெரியுமா, உங்களிடம் அதிமுகவினர் தொடர்பான ஆவணங்கள், பத்திரங்கள் இருக்கிறதா, உங்களது தந்தையிடம் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் ஒப்பந்தம், அரசியல் தொடர்பில் இருக்கிறார்களா, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு உங்களை கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் சந்தித்தார்களா, நீங்கள் இப்போது அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக இருக்கிறீர்களா, பங்களா விவகாரத்தில் தொடர்புடைய கைதான நபர்கள் உங்களை சந்தித்தார்களா, ’’ என்பது உட்பட பலவேறு கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர். நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கிய விசாரணை இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.