கோவை மாநகராட்சி வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நொய்யல் ஆற்று பள்ளத்தில் தவறி விழுந்து பலி..

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் எம்.கிருஷ்ணமூர்த்தி (வயது60). கோவை மாநகராட்சி 56-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர். கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவராகவும் உள்ளார். இவர் திருச்சி ரோடு ஒண்டிப்புதூர் பகுதிக்கு நேற்று இரவு காரில் சென்றுள்ளார். பின்னர் பட்டணம் நொய்யல் ஆற்று பாலத்தின் அருகே சாப்பாட்டு பார்சை கையில் வைத்துக்கொண்டு சிறுநீர் கழிப்பதற்காக அவர் நின்றதாக தெரிகிறது. அப்போது திடீரென்று கால் இடரி நொய்யல் ஆற்றின் பள்ளத்துக்குள் தவறி விழுந்தார். 15 அடி பள்ளத்தில் பாறை இருந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பள்ளத்தில் கிடந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இறந்த கவுன்சிலர், கோவை மாநகராட்சியில் ஏற்கனவே ஒருமுறையும் கவுன்சிலர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.