கோவை கணபதி அடுத்த காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுகந்தராம் (வயது 22). கடந்த ஆண்டு பிரதீப் என்பவரை சில நபர்கள் அரிவாளால் வெட்டி உள்ளனர். அதற்காக கோர்ட்டில் சாட்சி சொல்வதற்காக நேற்று காலை சுகந்தராம் கோவை கோர்ட் வளாகத்திற்கு வந்துள்ளார். அப்போது சுகந்தராமுடன் அவரது நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர். அதிகமான நபர்கள் கோர்ட்டில் நிற்பதாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர் .உடனே அங்கு இருந்த சுகந்தராம் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் எதற்காக இங்கு இப்படி கூடி இருக்கிறீர்கள் என கேட்டுள்ளனர் .அதற்கு சுகந்தராம் உள்ளிட்ட நபர்கள் சினிமாவிற்கு வந்ததாக கூறியுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரித்த போது அவர்கள் கோர்ட்டில் சாட்சி சொல்ல வந்த எதிரணியினரை தாக்குவதற்காக கூடி இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் அவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் சுகந்தராம் மற்றும் அவருடன் இருந்த சஞ்சீவ் குமார்( 20), சுதீர் (18), கணபதி பாலாஜி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (24), துடியலூர் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்( 23 ),திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த தமிழ்மணி (23 )ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை சிறைக்கு அழைத்து செல்வதற்காக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது வெளியில் கூடியிருந்த கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் வாகனத்தை அழைத்து செல்ல விடாமல் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .பின்னர் போலீசார் அவர்கள் அனைவரையும் அப்புறப்படுத்தி விட்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அழைத்துக் கொண்டு செல்லவிடாமல் தடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதிகள் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.