இராணிப்பேட்டை மாவட்டம்: உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர்பண்பாடு மிகவும் தொன்மையானது. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலம் தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும்,வளரும் தலைமுறையினருக்கு முழுமையாக கடத்துவதற்கு பண்பாட்டின் முக்கிய கூறுகளான கலை, இலக்கியம், கல்வி இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களுக்கு உணர்த்துவது சமூகத்தின் கடமையாகும். நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது என்பது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும்- நாகரீகமும், சமூகநீதி,பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசால் திட்டமிடப்பட்டுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்படி மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் கலவை வட்டம், முள்ளுவாடி கிராமம் G.P நகரில் உள்ள ஆதி பராசக்தி பொறியியல் கல்லூரியில் 31-03-2023ம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணியளவில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழறிஞர்களின் சொற்பொழிவுகளை குறைந்தபட்சம் 1000 மாணவர்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்நிகழ்வில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான அரங்குகள் பல்வேறு துறையினர்களால் அமைக்கப்படவுள்ளது. எனவே இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவ-மாணவியர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தமிழர் பண்பாடு குறித்தும், வேலைவாய்ப்பு குறித்தும் தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி கேட்டுக்கொண்டுள்ளார்.