குடியிருப்பு மற்றும் யானை வழித்தடத்துக்கு அருகே சடலம் எரியூட்டும் தகன மேடை அமைக்க எதிர்ப்பு – ஈஷா எதிர்ப்பு கூட்டு இயக்கம் சார்பில் புகார் மனு!

கோவை மாவட்டம் இக்கரை போளுவம்பட்டி கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பாக ஈஷா யோகா மையம் சார்பில் எரியூட்டும் தகனமேடை அமைக்க அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர், துணை இயக்குனர், கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கும், போளுவாம்பட்டி துணைத் தலைவர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஈசா எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் செவ்வாயன்று புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- கோவை, இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் மக்கள் குடியிருந்தும் விவசாயம் செய்தும் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றார். இக்கிராமத்தில் சுப்பிரமணியம் என்பவர் குடியிருந்து வரும் வீட்டு
காம்பவுண்ட் சுவரை ஒட்டியும் அவரது நிலத்தில் உள்ள குடிநீர் கிணற்றுக்கு அருகில் ஈசா பவுண்டேஷன் நிறுவனத்தால் சடலம் எரியூட்டு தகனமேடை அமைக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக கடந்த 09.10.2019 தேதி அன்று செம்மேடு கிராமம், முட்டத்துவயல் பகுதியில் விவசாயம் செய்து வரும் சிவஞானம் என்பவர்
அனைத்து அரசாங்க அமைப்புகளுக்கும் பதிவுத் தபால் மூலம் எரியூட்டு தகன மேடை அமைப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக கிராமவாசிகளிடம் எவ்வித அறிவிப்பும் தராமலும், எவ்வித விளக்கமும் கோராமலும் தற்சமயம் எரியூட்டு தகன மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் இக்கரை போளுவாம்பட்டி கிராமமானது மலைப் பாதுகாப்பு ஆணையத்துக்கு (HACA) உட்பட்ட கிராமப் பஞ்சாயத்தாகும். அதுதவிர இக்கிராமமானது யானை வழித்தடமும். அதன் வாழ்விடமுமாகும். இருப்பினும் மேற்படி ஈசா பவுண்டேஷன் நிறுவனமானது தனது பெயரிலும், தனது இதர நிறுவன பெயரிலும் அக்கிராமத்தில் சுமார் 285 ஏக்கம் நிலத்தை கிரையம் பெற்றுள்ளனர். இந்நிலையில் மேற்படி பூமியில் ஈசா பவுண்டேஷன் நிறுவனமானது இயற்கைக்கு மாறாக பலவிதமான கட்டுமானங்களை மேற்கொண்டும், விவசாய பூமிகளை தரிசாக விட்டு விவசாய சூழ்நிலைக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக தாங்களும் உட்பட இதர கிராம மக்களும் மலைவாழ் மக்களும் மேற்படி நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும் ஆட்சேபனை தெரிவித்திருந்தோம். இதன் காரணமாக ஆட்சேபனை தெரிவிக்கும் நபர்களை அக்கிராமத்திலிருந்து விரட்டியும் மேற்படி மற்ற பூமிகளை கையகப்படுத்தும் நோக்கத்துடனும் மேற்படி நிர்வாகம் கடந்த பல வருடங்களாக மேற்படி நிர்வாகத்திற்கு அவர்களது விவசாய பூமிகளை விற்பனை செய்யுமாறு மிரட்டியதற்கு அவர்கள் செவி சாய்க்காததன் காரணமாக அவர்களை விரட்ட வேண்டி தற்சமயம் மேற்படி எரியூட்டு தகன மேடை அமைக்கப்பட்டு வருகிறது. நாங்கள் தெரிவிப்பது யாதெனில், மேற்படி இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் சுமார் 6300 நபர்களுக்கு குறைவாகவே வசித்து வருகின்றனர். மேலும் அக்கிராமத்தில் 2 இடுகாடுகளும், செம்மேட்டில் ஒரு இடுகாடும் மற்றும் சுடுகாடும் உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஆதிவாசிகளுக்கு மடக்காடுபதி மற்றும் முள்ளாங்காட்டுபதி ஆகிய இடங்களில் தனித்தனியாக சுடுகாடும் உள்ளது. மேலும் மலைவாழ் மக்கள் தங்களது வாழ்க்கை முறைப்படி சடலங்களைப் புதைப்பது வழக்கமாகும். அவர்களுக்கு எரியூட்டு மையம் தேவையில்லை. மேலும், அக்கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மத்துவராயபுரத்தில் ஒரு தகன எரியூட்டு மையமும். 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொண்டாமுத்தூரில் மற்றொரு தகன எரியூட்டு மையமும் உள்ளது. எனவே இக்காரணங்களின் அடிப்படையில் தற்சமயம் ஈசா பவுண்டேஷன் அமைத்துவரும் எரியூட்டு தகன மேடை முற்றிலும் வேண்டுமென்றே அவர்களை விரட்ட ஏற்படுத்தப்பட்டதாகும். இவ்வுண்மைகளை மறைத்து ஈசா பவுண்டேஷன் நிறுவனமானது குடியிருப்பு மையத்திலிருந்து 30 அடி இடவெளிக்குள் 24 மணி நேரமும் சடலங்களை எரிப்பதற்கு அனுமதி பெற்று ஒரு நாளைக்கு 14 சடலங்கள் வரை எரிக்கும் தகன மேடையை உருவாக்கி வருகின்றது. உண்மையில் அத்தகைய தகன எரியூட்டு மையம் அமைக்கப்பட்டால் அக்கிராமவாசிகளுக்கு வாழ்விடம் ஓர் கேள்விக்குறியாகும். மேற்படி தகன எரியூட்டு மையத்திலிருந்து வெளியாகும் சடலங்களை எரித்த சாம்பல் புகையானது இயற்கை வாழ்விற்கு அச்சுறுத்தும் வகையில் நோய்களை ஏற்படுத்தும்.
உண்மையில் மேற்படி எரியூட்டு தகன மேடை அமைப்பது குறித்து தினசரி நாளிதழ்களில் எவ்வித விளம்பரமும் சம்பந்தப்பட்ட துறையால் அறிவிக்காமல், பொதுவாக அருகாமை கிராமங்களிலிருந்து ஆட்சேபனையின்மை பெற்று எரியூட்டு தகன மேடை அமைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இக்கரை போளுவாம்பட்டி கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த மக்களின் அனுமதி பெறாமல் வேறு கிராம மக்களிடம் ஆட்சேபனையின்மை பெற்றிருப்பதாக கூறுவது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானதாகும். இந்நிலையில் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் ஈசா மையம் எரியூட்டு தகன மேடை அமைப்பது சட்டப்படி தவறாகும். மேற்படி ஈசா பவுண்டேஷன் நிறுவனத்தின் செயலானது அக்கிராமவாசிகளை அடியோடு வெளியேற்றி முழுக் கிராமத்தையும் வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்து லாபம் ஈட்டவே இவ்வாறான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
எனவே, தாங்கள் இது குறித்து விசாரித்து எங்களது புகாரை ஏற்று தற்சமயம் ஈசா பவுண்டேஷன் நிறுவனத்தால் மேற்படி பூமியில் அமைக்கப்பட்டு வரும் சடவங்கள் எரியூட்டு தகன மேடை அமைக்கும் உத்திரவை ரத்து செய்து இயற்கை சூழ்நிலையை மீட்க ஆவண செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு ஈஷா எதிர்ப்பு கூட்டு இயக்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.