பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தல் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற நிலையில், உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் இறங்கினார்.
தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை தவிடுபொடியாக்கி டொனால்ட் டிரம்ப் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மீண்டும் அமெரிக்காவின் அதிபராக தேர்வாகி, இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது வாழ்த்துப் பதிவில் கூறியதாவது,’தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்ற எனது நண்பர் டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்துகள். உங்களின் கடந்த ஆட்சியின் வெற்றிப் பாதையில் தொடரவும், நம் இருவரின் கூட்டணி புதுப்பிக்கப்பட்டு இரு நாடுகளின் உறவுகள் மேம்பட எதிர்நோக்கியுள்ளேன்.