சட்டீஸ்கரில் இன்று காங்கிரஸ் மாநாடு – தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை..!

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் இன்று காங்கிரஸ் மாநாடு துவங்க உள்ளது. இதில்,எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் காங்கிரஸ் கூட்டணி திட்டம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.

அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து முடிவு செய்யப்படும். அதேநேரம் இந்தாண்டு நடக்கும் 9 மாநில சட்டமன்ற தேர்தல், அடுத்தாண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில்,” இந்தாண்டு நடைபெற உள்ள 9 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில் சட்டீஸ்கர், ராஜஸ்தானில் கட்சி ஆட்சியில் இருக்கிறது. மத்திய பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்த தேர்தலில் சில மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கும் திட்டம் பற்றியும் விவாதிக்கப்படலாம்” என தெரிவித்தன. கடந்த செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். ஒற்றுமை பயணத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது போன்ற சூழ்நிலையில் நடைபெறும் ராய்ப்பூர் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.