திருவனந்தபுரம்: காங்கிரஸ் எம்எல்ஏ பலாத்கார புகாரை வாபஸ் பெறுவதற்காக ரூ. 30 லட்சம் பேரம் பேசினார் என்று பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியை தெரிவித்து உள்ளார்.
கேரள மாநிலம் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் எல்தோஸ். இவர் மீது திருவனந்தபுரம் பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியை கோவளம் போலீசில் பலாத்கார புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ எல்தோஸ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புகார் கொடுத்த ஆசிரியை திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் எம்எல்ஏ எல்தோசுடன் எனக்கு 10 வருடங்களாக பழக்கம் உண்டு. கடந்த சில மாதங்களாகத் தான் நாங்கள் மிகவும் நெருக்கமானோம். ஆனால் அவர் என்னிடம் மோசமாக பழகத் தொடங்கியதால் அவரது நட்பை துண்டிக்க முயற்சித்தேன். இதனால் என்னை அடித்து துன்புறுத்த தொடங்கினார். இதனால், போலீசில் புகார் அளித்தேன். புகாரை வாபஸ் பெறுவதற்காக என்னை திருவனந்தபுரத்திலுள்ள ஒரு வக்கீல் அலுவலகத்திற்கு வரவழைத்து அவர் ரூ. 30 லட்சம் பேரம் பேசினார். ஆனால் அதற்கு நான் ஒத்துக் கொள்ளவில்லை. விரைவில் அவர் குறித்த மேலும் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிடுவேன். இவ்வாறு ஆசிரியை கூறினார்.