ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, எல்லையில் 10 அடி நீள குகையில் பதுக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
ஜம்மு – காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளளது. எல்லையில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
எல்லையில் பயங்கரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக, சிறப்புத் தேர்தல் பார்வையாளர் மற்றும் புலனாய்வுக் குழுக்கள் மூலம் இந்த உளவுத் தகவல் கிடைத்தது.இவ்வளவு ஆயுதங்களா? குப்வாரா மாவட்டம், கெரான் செக்டாரில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடத்தை முறியடித்து, மிகப்பெரிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர். தேர்தலுக்கு முன்பு அச்சத்தையும் பீதியையும் உருவாக்கும் நோக்கில் பரபரப்பான தாக்குதல்களை நடத்த இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிந்தது. இதனால் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தீட்டிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு படை உயர்அதிகாரி தெரிவித்தார்.