சென்னை: 4 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பான வீடியோ ஒன்றை சந்திரசேகர ராவ் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளார்.
தெலுங்கானாவில் பாஜக – தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளுக்கு இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. அங்கு நேற்று முனுகோட் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தல் காரணமாக அங்கு அரசியல் களம் சூடாக இருந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிந்ததும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முக்கியமான வீடியோ ஒன்றை நேற்று செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்து உள்ளார்.
தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக கூறி அவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்எல்ஏக்களை பாஜகவிற்கு தாவ சொல்லி பேரம் நடந்ததாக கூறி, இந்த வீடியோவையோ சந்திரசேகர ராவ் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் ராமச்சந்திர பாரதி, சிம்ஹாஜி மற்றும் நந்த குமார் என்ற மூன்று நிர்வாகிகள் உள்ளனர். இவர்கள் 4 டிஆர்எஸ் எம்எல்ஏக்களை பாஜக பக்கம் இழுக்க பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கான வீடியோவை சந்திரசேகர ராவ் பகிர்ந்து, கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க இவர்கள் திட்டம் போடுகிறார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்து உள்ளது. கையும், களவுமாக அவர்கள் சிக்கிவிட்டனர் என்று கேசிஆர் குறிப்பிட்டு உள்ளார்.