போதைப் பொருள் கடத்தலை தடுக்க மருந்து கடை – கூரியர் சர்வீஸ் நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் சர்வீஸ் நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில்
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மேட்டுப்பாளையம் உட்கோட்டங்களின் துணை காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் சர்வீஸ் நிறுவன உரிமையாளர்களுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மருந்து கடை உரிமையாளர்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவர் பரிந்துரை சீட்டின்றி மருந்து வழங்க கூடாது எனவும், மயக்க மருந்து, வலிநிவாரணி மருந்துகளை கேட்டு அடிக்கடி வருபவர்கள் குறித்த விபரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உரிய மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகள் வழங்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கூரியர் சர்வீஸ் நிறுவனங்களுக்கு வழக்கமாக அனுப்பும் வாடிக்கையாளர்கள் விவரம் பதிவு செய்ய வேண்டும் எனவும், கூரியர் நிறுவனத்தில் சந்தேகப்படும் படியான பார்சல் அனுப்பினால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும், கூரியர் நிறுவனத்தில் சந்தேகப்படும் படியான நடவடிக்கைகள் தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எடுத்துக் கூறினார்கள்.