தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை… சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்வு..!!

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது .இந்த மழையால் கோவையில் சூடு தணிந்து குளிர்ந்த சிதோஷ்ணநிலை நிலவுகிறது .மேலும் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும், தண்ணீர் வரத்து ஓரளவு அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் அதனை ஒட்டிய வன பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் கேரள வன பகுதி அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அணியின் நீர் பிடிப்பு பகுதியில் 35 மில்லி மீட்டர் மழை பெய்த நிலையில் நேற்று 52 மில்லி மீட்டர் மழையும் அடிவாரத்தில், 34 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. இதன் காரணமாக சிறுவாணி அணையில் நீர்மட்டம் 10 அடியாக உயர்ந்துள்ளது . இந்த அணையின் உயரம் 50 அடி ஆகும்..