கோவை : சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணியின் நீர் பிடிப்பு பகுதியில் 31 மி. மீட்டர் மழையும் அடிவாரத்தில் 10 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து 44 அடியை தொட்டது. கேரளாவில் பாதுகாப்பு கருதி எந்த அணையிலுமே முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்குவதில்லை. இதனால் 50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் 44.60 அடி வரைதான் தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அணைக்கு வரும் தண்ணீரின் அளவையும் , அணை நீர்மட்டத்தையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அணையில் இருந்து நேற்று 9 கோடியே 50 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. தொடர்ந்து அணை நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்..