இந்திய முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை கருத்து … ஈரான் மதகுருவுக்கு இந்தியா கடும் கண்டனம்..!

புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரான் உயர்தலைவரும் இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி இன்று (செப்.16) மாலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இஸ்லாமிய சமுதாயத்தின் தனித்துவ அடையாளத்தை அலட்சியப்படுத்த எதிரிகல் முயற்சித்து வருகின்றனர். மியான்மர், காசா, இந்தியா உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துயரங்களை மறந்துவிட்டால் நாம் நம்மை முஸ்லிம்களாகவே கருதமுடியாது’ என்று தெரிவித்திருந்தார்.

கமேனியின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் சிறுபான்மையினர் குறித்து ஈரானின் உயர்தலைவர் தெரிவித்த கருத்துகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இவை தவறான தகவல்கள் மட்டுமின்றி ஏற்றுக்கொள்ள முடியாதவையும் ஆகும். சிறுபான்மையினர் பற்றி கருத்து தெரிவிக்கும் நாடுகள் மற்றவர்களைப் பற்றி எந்த அவதானிப்பும் செய்வதற்கு முன் தங்கள் சொந்த வரலாற்றை பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.