அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பும் வேண்டும்- கார்கேவுக்கு அமித் ஷா கடிதம்.!!

பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் மைதேயி, குக்கி இன குழுக்களுக்கிடையிலான வன்முறையில், குக்கி பழங்குடியினப் பெண்கள் இரண்டு பேர், மைதேயி இன ஆண்களால் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் மே 4-ம் தேதியே நடந்திருந்திருந்தாலும்கூட, அப்போதே வழக்கு பதிவுசெய்த போலீஸார் 70 நாள்களுக்கு மேலாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல், கடந்த வாரம் வீடியோ வெளியானவுடன், அந்த வீடியோவில் வரும் சிலரைக் குற்றவாளிகள் எனக் கைது செய்திருக்கின்றனர். ஆனால், அதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதை போலீஸாரும், மாநில அரசும் இன்னும்கூட கண்டுபிடிக்கவில்லை.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இது பற்றி விவாதம் நடத்த வேண்டும், பிரதமர் அறிக்கை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும் பா.ஜ.க செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்கப்படாமலே நாடாளுமன்ற இரு அவைகளும் கடந்த 4 நாள்களாக ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பா.ஜ.க மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோர் `விவாதம் நடத்த நாங்கள் தயார்’ எனக் கூறிவருகின்றனர். இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் பற்றி மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், “மணிப்பூரில் நீதிமன்றத்தின் சில உத்தரவுகள், சில சம்பவங்களால் மே மாதம் வன்முறை வெடித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன. அறிக்கைக்கு மட்டுமல்ல, முழு விவாதத்துக்கும் அரசு தயாராக இருக்கிறது என்று நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன். ஆனால், இதில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு சுமுகமான சூழலில் விவாதத்தை நடத்த முன்வர வேண்டும். வாருங்கள், நாட்டின் முன் இருக்கும் சவால்களுக்கு எதிராக இணக்கமான வழியில் நியாயமான, நிரந்தரமான தீர்வு காண, கட்சியின் எல்லைகளைத் தாண்டி எழுவோம்” என்று அமித் ஷா வலியுறுத்தியிருந்தார்.

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு பா.ஜ.க செவிசாய்க்காததால், மக்களவையில் பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர, எதிர்க்கட்சிகளின் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.