குற்றவாளிகள் பயமின்றித் சுற்றி திரிகிறார்கள்… சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு பேச்சு ..!

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் பணியிடங்கள், கல்வி நிலையங்கள் போன்றவற்றில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்முறைகள் நாளும் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. இதனால், சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குள்ளாகி விவாதப்பொருளாக உருவெடுத்திருக்கிறது. இந்த நிலையில், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பயமின்றி சுற்றித்திரிவதாக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேதனை தெரிவித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டைக் குறிக்கும் மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் பேசிய திரௌபதி முர்மு, “குற்றம் செய்த பிறகும் குற்றவாளிகள் பயமின்றித் திரிவது நம் சமூக வாழ்வின் துயரம். ஆனால், இதில் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள்தான் குற்றங்கள் செய்ததைப் போல பயத்தில் வாழ்கின்றனர். அதிலும், பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. ஏனெனில், இந்த சமூக மக்கள்கூட அவர்களை ஆதரிப்பதில்லை” என்று கூறினார்

மேலும், தொடர்ந்து பேசிய திரௌபதி முர்மு, “சமீப காலமாக சரியான நேரத்தில் நிர்வாகம், உள்கட்டமைப்பு வசதிகள், பயிற்சி மற்றும் மனிதவளம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக என்று எனக்குத் தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும், இவையனைத்திலும் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. சீர்திருத்தத்தின் அனைத்து பரிமாணங்களிலும் விரைவான முன்னேற்றம் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

அதோடு, தேர்வுக் குழுக்களில் பெண்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்திருப்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தேர்வுக் குழுக்களில் பெண்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது” என்று தெரிவித்தார். இந்த மாநாட்டில்தான் உச்ச நீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னத்தை திரௌபதி முர்மு வெளியிட்டார்.

.