டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவதற்காக 200க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் குவிந்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 மத்திய அமைச்சர்கள் விரைந்துள்ளனர்.
மத்திய பாஜக அரசு 2020-ல் கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக வரலாறு காணாத வகையில் கடும் பனி, குளிர், வெயிலுக்கு இடையே ஓராண்டு காலம் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டங்களில் 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் விளைவாக சர்ச்சைக்குரிய3 விவசாய சட்டங்களை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. பிரதமர் மோடியும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை; ஆகையால் டெல்லியில் பிப்ரவரி 13-ந் தேதி மீண்டும் ஒன்று கூடி போராட்டம் நடத்துவோம் என 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் அறிவித்தன. இப்போராட்டத்தில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்கள் உள்ளிட்டவைகளில் டெல்லியை முற்றுகையிட்டனர். இதனால் டெல்லி எல்லையான நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நொய்டா அருகே மேம்பாலத்தில் இருந்து டெல்லி நோக்கி நேற்று விவசாயிகள் பேரணியாக புறப்பட முயன்றனர். ஆனால் போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசாரின் தடுப்புகளை மீறி பலர் முன்னேறிச் சென்றனர். இதனையடுத்து நடு சாலையிலேயே அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனையடுத்து பிற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மீண்டும் ஒன்று திரண்டுவிடாமல் தடுக்க டெல்லி எல்லைகள் மூடி சீல் வைக்கப்பட்டன. போலீசாருடன் துணை ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டது.
தற்போதும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டிருப்பதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 மத்திய அமைச்சர்கள் அங்கு விரைந்துள்ளனர்..