வேலூர் மாவட்டம், திருவலம் அருகே குகையநல்லூர் ஊராட்சி எல்லைக்குஉட்பட்ட பெரிய ராமநாதபுரம் சாலையோரம் ‘செயின்ட் ஜோசப் கருணை இல்லம்’ என்ற பெயரில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் முதியோர்களின் அழுகுரல் கேட்பதாக எழுந்தப் புகாரில், 2018-ல் இந்த இல்லத்துக்கு மாவட்ட நிர்வாகம் ‘சீல்’ வைத்துவிட்டது. அதைத்தொடர்ந்து, இந்த இல்லம் மீண்டும் எப்படி செயல்பாட்டுக்கு வந்தது என்றுத் தெரியவில்லை. இந்த நிலையில், மீண்டும் முதியோர்கள் தங்க வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப் படுவதாக நேற்று மாலை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு இந்த இல்லம் குறித்த தகவல் கிடைத்தது. வேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் பூங்கொடி தலைமையிலான வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் அந்த இல்லத்துக்கு விரைந்துச் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். இல்ல வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் மூன்றடுக்கு பிரமாண்ட கட்டடத்தின் முதல் மாடியில் முதியவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, ”நாங்க வீட்டுக்குப் போறோம். இங்க சாப்பாடு கொடுக்க மாட்டிருக்கிறாங்க. அடிச்சி கொடுமை செய்றாங்க” என்று முதியவர்கள் குமுறினர். அங்கிருந்த இல்லத்தின் நிர்வாகிகள் விசாரணைக்கு ஒத்துழைப்புத் தராததால், இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 37 பெண்கள், 32 ஆண்கள் என 69 முதியவர்களையும் அதிகாரிகள் மீட்டனர். அவர்கள் உடம்பில் காயமிருந்ததால் அனைவரையும் ஆம்புலன்ஸுகளில் ஏற்றி ஆற்காடு, வாலாஜாபேட்டை, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த இல்லத்தின் மீது நிறைய மர்மங்களும் இருக்கின்றன. உடல்கள் பதப்படுத்தக்கூடிய 20 கான்கிரீட் அலமாரிகள் இருக்கின்றன. அவை எதற்காக என்ற கேள்வியும் எழுகிறது. ”இந்த மர்ம முடிச்சுகளுக்கான விடை அடுத்தக்கட்ட விசாரணையில் தெரியவரும் என்கிறார்கள். இந்த இல்லத்துக்கு மீண்டும் ‘சீல்’ வைக்கப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும்” என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.