அடடா!! ரவுடிகள் ஆட்டம் போட்டதெல்லாம் அப்போ.. இப்போ வேற லெவல் இருங்காங்க உ.பி போலீஸ்- பிரதமர் மோடி பெருமிதம்..!

க்னோ: உத்தரப் பிரதேசம் ஒரு காலத்தில் மோசமான சட்ட ஒழுங்கை கொண்டிருந்ததாகவும், தற்போது இந்த விஷயத்தில் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணைகள் நேற்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி இந்திரா காந்தி பிரதிஷ்டான் அரங்கில் நடைபெற்றது. இதில் பணி ஆணைகளை பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “காவல் துணை ஆய்வாளர்கள், மாகாண ஆயுதப்படை காவலர்கள் (பிஏசி) படைப்பிரிவு கமாண்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 9,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணி ஆணைகளை பெற்றுள்ளீர்கள் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உத்தரப் பிரதேச அரசு மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை பலப்படுத்தியுள்ளது. புதிய நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் மூலம் மாநிலம் தற்போது புதிய அடையாளத்தை பெற்றிருக்கிறது.

மட்டுமல்லாது மாநிலம் அதிக அளவிலான சிறுகுறு தொழில் நிறுவனங்களை பெற்றிருக்கிறது. இந்த தொழில் நிறுவனங்கள் மாநிலத்திற்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது. மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவதற்கான ஏற்ற சூழலை மாநிலம் வழங்கியுள்ளது. இந்த அளவுக்கு நாட்டில் வேறு எங்கும் சிறப்பான சூழல் அமையவில்லை. ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசம் மாஃபியா மற்றும் குண்டர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மாநிலமாக இருந்தது. சட்டம் ஒழுங்கு அந்த அளவுக்கு மோசமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியின் கீழ் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல முதலீடுகளும் அதிகரித்துள்ளன. எனவே இதன் காரணமாக உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி புதிய வேகத்தை எட்டியுள்ளது. காவல்துறையை பொறுத்த அளவில் கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 1.5 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். டபுள் என்ஜின் அரசு மூலம் இக்காலக்கட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளதால் வாரணாசிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தர முன்பதிவு செய்துள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் வாரம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்கள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த முயற்சி மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு (ODOP) திட்டம், முத்ரா யோஜனா மற்றும் சரக்கு மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சமூக கட்டமைப்பில்தான் நீங்கள் சமூக பணியை ஆற்ற இருக்கிறீர்கள். நீங்கள் குற்றவாளிகள் பயப்படும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். சாதாரண மக்கள் பயப்படும் அமைப்பை அல்ல” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.