பட்டப்பகலில் துணிகரம்… கோவை ஒட்டல் அதிபர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை… காரில் தப்பிய முகமூடி கொள்ளையர்கள்.!!

கோவை ஆர். எஸ். புரம், கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் குமார் ( வயது 43 )இவர்  அங்குள்ள செல்வராஜ் என்பவரின் வீட்டின் மாடியில் தங்கி பூ மார்க்கெட் பகுதியில் மளிகை கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை குமார் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஓட்டல் மற்றும் மளிகை கடைக்கு சென்று விட்டார் .இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வீட்டில் இருந்துமுகமூடி அணிந்த படி 2 பேர் வெளியே வந்து வீட்டின் வெளியே இருந்த காரில் ஏறினார்கள் .அதை அந்த வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் பார்த்துவிட்டு அருகே சென்றார் .உடனே அவர்கள் கதவை பூட்டி கொண்டனர். அருகில் சென்று காரின் கண்ணாடியை தட்டினார். அதை திறக்காமல் உடனே அந்த 2 பேரும் காரில் வேகமாக தப்பி சென்றுவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் மாடிக்கு சென்று பார்த்தபோது குமாரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் குமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார் உடனே அவர் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்தன. 60 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.அதன் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும். இதுகுறித்து ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்..கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது : குமார் வீட்டில் கொள்ளை அடித்துச் சென்ற நபர்கள் தப்பிய கார் நெல்லை மாவட்டம் பதிவு எண்கொண்டது. அத்துடன் அருகில் உள்ள வீடு கடந்த 4 மாதங்களாக பூட்டி கிடந்தது. அங்கு சிலர் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அவர்கள் யாராவது நோட்டம் விட்டு குமார் வீட்டில் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது .அந்த கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.