பட்டப்பகலில் அசால்ட்டாக கோவை பள்ளிக்கூட ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 58 பவுன் நகை, பணம் திருட்டு – முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை.!!

கோவை வடவள்ளி பெரியார் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 53). இவரது மனைவி கலைவாணி .இவர் வடவள்ளியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று கலைவாணி பள்ளிகூடத்துக்கு சென்றார். மதியம் தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தனது செல்போனில் சார்ஜ் குறைந்து விட்டது. எனவே சார்ஜ் போட வீட்டில் இருக்கும் செல்போன் சார்ஜரை எடுத்து வரும் படி கூறினார்.மதியம் 1:45 மணிக்கு ரமேஷ் குமார் வீட்டில் இருந்த சார்ஜரை எடுத்து கொண்டு வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்குச் சென்று மனைவி கலைவாணியிடம் செல்போன் சார்ஜரை கொடுத்துவிட்டு மீண்டும் 2 – 05 மணிக்கு வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்கு வந்தபோது முகமூடி அணிந்த 2 பேர் வீட்டில் இருந்து வெளியே வருவது தெரிய வந்தது. உடனே அவர்களைப் பிடிக்க முயன்றார். அப்போது அந்த கொள்ளையர்கள் இருவரும் அவரை கீழே தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில்  தப்பி சென்று விட்டனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. அதிலிருந்த 58 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இவை களின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் .ரமேஷ் குமார் வீட்டில் இல்லாத 20 நிமிடங்களில் இந்த துணிகர கொள்ளை நடந்தது.இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ( பொறுப்பு) போலீசாருன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் . அதில் ரமேஷ் குமார் வீட்டில் இருந்து முகமூடி அணிந்த 2 பேர் வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அவர்கள் வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரிய வந்தது. கொள்கையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..