கேரள மாநிலம் திருச்சூர் பக்கம் உள்ள சாலக்குடியில் “பெடரல் ” வங்கி செயல்பட்டு வருகிறது.இங்கு நேற்று மதியம் 2:15 மணியளவில் மேலாளர் பாபு மற்றும் ஒரு ஊழியரும் வங்கியில் இருந்தனர் . மற்றவர்கள் மதிய உணவுக்காக வெளியே சென்றிருந்தார்கள். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒரு ஆசாமி வாகனத்தை வங்கிக்கு வெளியே நிறுத்திவிட்டு முகமூடி மற்றும் கையுறை அணிந்து கத்தியுடன் நுழைந்தான். அங்கிருந்த நாற்காலியை எடுத்து “கேஷ் கவுன்டர் ” அறையின் கதவை உடைத்து ஊழியர்களை இந்தியில் பேசி மிரட்டி விட்டு வங்கியில் இருந்த ரூ.15 லட்சத்து 20 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து சாலக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு திருச்சூர் போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையன் இரு சக்கர வாகனத்தில் கோவைக்கு தப்பி இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து கோவை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது . போலீசார் அந்த கொள்ளையனை தேடி வருகிறார்கள். பட்டப் பகலில் வங்கியில் நடந்த இந்த முகமூடி கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பட்டப்பகலில் துணிகரம்… கேரள வங்கியில் ரூ.15 லட்சம் திருட்டு – முகமூடி கொள்ளையன் கைவரிசை.!!
