எடப்பாடியாரே ரொம்ப சந்தோஷ பட வேண்டாம்.. சசிகலா தொடர்ந்த பொதுச் செயலாளர் வழக்கு இருக்கே.. ஓபிஎஸ் அணிக்கு ஒரே ஆறுதல்..!

சென்னை: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக அக்கட்சியானது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமாகி இருக்கிறது என்பது அவரது ஆதரவாளர்களின் மகிழ்ச்சி.

ஆனால் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக் அப்படி எல்லாம் இபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைய கூடாது என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

அதிமுகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் உட்கட்சி மோதலில் 2 முக்கியமான வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதில் ஒன்றுதான் ஜூலை 11 பொதுக்குழு வழக்கு. 2011-ம் ஆண்டு சென்னையில் அதிமுக பொதுக்குழுவானது இபிஎஸ் அணியினரால் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு என்ற விதி ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

அதிமுக இபிஎஸ் அணியின் இந்த ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. முதலில் தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். ஆனால் இபிஎஸ் அணி மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் பெஞ்ச், ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்துதான் ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை உறுதி செய்தது.

ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதும் செல்லும். இதனால் அதிமுக இப்போது இபிஎஸ் வசமாகிவிட்டது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவுதான்.

அதேநேரத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு ஒரே ஒரு ஆறுதல் பாக்கி இருக்கிறது. அது சசிகலா தொடர்ந்த வழக்கு. அதாவது ஜெயலலிதா மறைவின் போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது. ஆகையால் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிமுக அலுவலகத்துக்கு சென்று சசிகலாவும் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டார். அதிமுக பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில்தான் கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும் தேர்வு செய்தார் சசிகலா. மேலும் சசிகலா சிறைக்குப் போகும் போது அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தார். இந்த நியமனங்களை அப்போது இபிஎஸ் தரப்பு ஏற்றுக் கொண்டது. அந்த காலத்தில் ஓபிஎஸ் தரப்பு, சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியது.

சசிகலா சிறைக்குப் போன நிலையில் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் திரண்டனர். இதனால் ஓபிஎஸ் தரப்புடன் இபிஎஸ் சமாதானமாக போனார். இருதரப்பும் இணைந்தது. ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு இணைந்த நிலையில் 2017-ல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் தினகரன் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டதை எதிர்த்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இதனை எதிர்த்து இபிஎஸ் மனுத் தாக்கல் செய்தார். சசிகலாவின் மனுவை சிட்டி சிவில் நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.

ஆனால் சசிகலா தரப்பு அடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இங்கேயும் இபிஎஸ் தரப்பு குறுக்கே நின்றது; ழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த சசிகலாவுக்கு உத்தரவிட வேண்டும்; அப்படி கட்டணம் செலுத்தாவிட்டால் சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மனுத் தாக்கல் செய்தது இபிஎஸ் தரப்பு. ஆனால் இபிஎஸ் தரப்பின் இந்த மனுவை டிஸ்மிஸ் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இதனைத் தொடர்ந்து சசிகலா அடுத்ததாக, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மனுத் தாக்கல் டிஸ்மிஸ் ஆகிவிட்டது. ஆகையால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள்; அப்போது தமது தரப்பை கேட்க வேண்டும் என்கிறது சசிகலாவின் கேவியட் மனு.

ஆக, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் தற்போதைய உச்சநீதிமன்றத்தின் மூலமாக இபிஎஸ் முன்பு இருக்கும் அத்தனை தடைகளையும் தகர்ந்துவிட்டதாக கொண்டாட முடியாது என ஒற்றை ஆறுதல் கொள்கிறது ஓபிஎஸ் தரப்பு.