கோவை அரசு மருத்துவமனை டாக்டருக்கு கொலை மிரட்டல்..!

கோவை சலீவன் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38 ) கூலி தொழிலாளி. குடிபோதையில் இருந்த இவரை ஒரு நபர் தாக்கியுள்ளார். அதில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த பயிற்சி டாக்டர் ஒருவர் செந்தில்குமாருக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் டாக்டரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அத்துடன் அங்கு காவலாளியாக வேலை செய்து வரும் ஜீவா என்பவரையும் அவர் மிரட்டியுள்ளார். இது குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.