திருமாவளவனுக்கு சமூகவலைதளத்தில் கொலை மிரட்டல் – சினிமா தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.!

துரை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்த சினிமா தயாரிப்பாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஏ.எம்.சௌத்ரி தேவர். இவர் சினிமா தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

உசிலம்பட்டி பகுதியை சாதிய வன்கொடுமை பகுதியாக அறிவித்திட வலியுறுத்தி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து, “உசிலம்பட்டியில் உன்னால் உன் கட்சி கொடியே ஏற்ற முடியாது. நீ உள்ளே வந்து ஆர்ப்பாட்டம் செய்வாயா? நான் உசிலம்பட்டிகாரன் வந்து பாருடா திருமாவளவா ?” எனப் பதிவிட்டிருந்தார் ஏ.எம்.சவுத்ரி.

இதையடுத்து, மதுரை மாவட்ட காவல்துறை எஸ்.பி அரவிந்திடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் புகார் மனு அளித்தார். அதில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சவுத்ரி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து அவதூறு செய்தியும், கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவனுக்கு கொலை மிரட்டலும் விடுத்து பதிவிட்டுள்ளார். சாதி மோதலை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ள சவுத்ரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி பரிந்துரைத்தார். இதையடுத்து உசிலம்பட்டியைச் சேர்ந்த சவுத்ரி மீது, மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.