கோவை: கோவையில் சேதமடைந்து காணப்படும் மூன்று மார்க்கெட் வளாகங்களை ரூ.8.07 கோடி மதிப்பில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்தார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்துநிலையத்துக்கு எதிரே, எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட் உள்ளது. இங்கு 120-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா மாநிலத்துக்கும் தினமும் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் இவ் வளாகத்துக்கு வந்து செல்கின்றனர்.
இதேபோல, சாயிபாபா காலனி காவல்நிலையம் அருகே அண்ணா தினசரி மார்க்கெட் வளாகம் உள்ளது.இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் ஏராளமான வியாபாரிகள் இந்த மார்க்கெட் வளாகத்துக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். சுந்தராபுரத்தில் தக்காளி மார்க்கெட் வளாகம் பழுதடைந்து உள்ளது.
இந்த மூன்று மார்க்கெட்களும் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. வியாபாரிகள் கூறும்போது, ”எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட் வளாகத்தில் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. மழை பெய்தால், மார்க்கெட் வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் இல்லை.
அண்ணா தினசரி மார்க்கெட் வளாகத்தில் கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இங்கும் மழைநீர் நீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்” என்றனர்.
மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ”எம்.ஜி.ஆர். மொத்த காய்கனி மார்க்கெட் வளாகம் ரூ.3.15 கோடி மதிப்பிலும், அண்ணா தினசரி மார்க்கெட் ரூ.4.19 கோடி மதிப்பிலும், சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் ரூ.73 லட்சம் மதிப்பிலும் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக நிறுவனத்தை தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட்டில் தளம் அமைத்தல், மழைநீர் கால்வாய் ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் செய்யப்படும். அண்ணா தினசரி மார்க்கெட்டில் கடைகளின் மேற்கூரை சரி செய்தல், மழைநீர் வடிகால் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் வடிகால் ஏற்படுத்தப்படும்,” என்றார்.