கோவை : தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இதனால் அவர்கள் ஊரை காலி செய்து விட்டு சொந்த மாநிலம் செல்வதாகவும் வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பரவியது.இதையடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இதில் அவர்கள் பாதுகாப்புடன் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.சில விஷமிகள் திட்டமிட்டு வதந்திகள் பரப்புவதால் இந்த நிலை ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டது.இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறார்.இதன்படி கோவை மாவட்டத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து நேரில் கண்டறிய இன்று கோவை வந்தார்.கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.பின்னர் அங்கு நடந்த வட மாநில தொழிலாளர் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.இதில் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழிலதிபர்கள,கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், டி.ஐ.ஜி விஜயகுமார், ( கோவை), ராஜேஸ்வரி (சேலம்)போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரவியது. இதையடுத்து 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த தனிப்படை போலீசார் பாட்னா, போபால், பெங்களூர் ,டெல்லி ஆகிய இடங்களில் முகாமிட்டு அந்த மாநிலத்தைச் சேர்ந்த 3பேரை கைது செய்துள்ளனர்.தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர்.அவர்களில் பலர் ஹோலி பண்டிகைக்கு முன்பதிவு செய்தவர்கள் தான் அதிகமாக ஊருக்குச் சென்றுள்ளார்கள்.வதந்திகளை பரப்புவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.கோவையில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி கேட்டபோது, -தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நாகர்கோவிலில் சப் இன்ஸ்பெக்டர் வில்சன், மற்றும்ஆல்வின் சுதன் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.பூமிநாதன் என்ற சப் இன்ஸ்பெக்டர் சென்னையில் ரவுடிகளால் தாக்கபட்டு படுகொலை செய்யப்பட்டார்.இப்படிபட்ட சூழ்நிலையில்ரவுடிகளை பிடிக்க செல்லும்போது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும்..கூகுள் பே”மூலம் நம் முகவரிக்கு யாரும் தவறாக பணம் அனுப்ப மாட்டார்கள்.பணத்தை அனுப்பிவிட்டு நம் பணத்தை கறந்து விடுவார்கள்.அப்படிப்பட்ட மோசடி பேர் வழிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வங்கிகளில் இருந்து உங்கள் ஓ டி பி நம்பரை யாரும் கேட்க மாட்டார்கள்.வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா முழுவதும் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அந்தந்த மாநில ஐபிஎஸ் அதிகாரியின் மூலம் அங்குள்ள தொழிலாளர்களுடைய நிலை என்ன?என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்…பின்னர் அவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மில்லுக்கு சென்றார். அங்குள்ள தொழிலாளர்களிடம் பாதுகாப்பு நிலை குறித்து கேட்டறிந்தார்.அவர்கள் டிஜிபி யிடம் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக பணிபுரிவதாக கூறினார்கள்.இந்த அரசும் காவல்துறையும் தங்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்துள்ளதை பெருமையாக சொன்னார்கள். தங்களுடன் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் சகோதர பாசத்துடன் பழகுவதாகவும் தெரிவித்தனர்.