டெல்லி: அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி சாதாரணமாக அரசு மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் சிகிச்சை பெற்று கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை பெயர் தாமோதர்தாஸ் மோடி. தாய் பெயர் ஹிரா பென் மோடி. இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் பிறந்தன. இதில் 4வது குழந்தையாக பிறந்தவர் பிரகலாத் மோடி. இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி ஆவார்.
அதாவது தாமோதர்தாஸ்-ஹிரா பென் மோடி தம்பதிக்கு சோமாபாய் மோடி, அம்ரித் மோடி என 2 மகன்கள் பிறந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 3வது மகனாக பிறந்தார். அவருக்கு பிறகு பிரகலாத் மோடி 4வது மகனாக பிறந்தார். பிரகலாத் மோடி 2001ல் துவங்கப்பட்ட அகில இந்திய நியாய விலைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக செயல்பட்டார்.
இந்நிலையில் தான் பிரகலாத் ஜோஷி பாதுகாவலர்கள் ஏதுமின்றி சாதாரண மக்கள் போல் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்ட தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரகலாத் ஜோஷி டயாலிசிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். வாரம் 2 முறை அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
இத்தகைய சூழலில் தான் பிரகலாத் ஜோஷி நேற்று சாதாரணமாக உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் சஞ்சய் நகரில் அமைந்துள்ளது மாவட்ட ஒருங்கிணைந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அவர் எவ்வித பாதுகாப்பும் இன்றி வந்த நிலையில் உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையடுத்து பிரகலாத் ஜோஷிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபற்றி மருத்துவமனையில் தலைமை டாக்டர் வினோத் சந்த் பாண்டே கூறுகையில், ”இது வழக்கமான நடைமுறை தான். தற்போது அவருக்கு ரத்த டயாலிசிஸ் சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டது” என்றார். மேலும் நேற்று பிரகலாத் ஜோஷி பிரதாப் விகார் பகுதியில் உள்ள தனது நண்பரின் இல்லத்தில் ஓய்வெடுத்தார். அதன்பிறகு காசியபாாத் பகுதியில் உள்ள உறவினர்களை அவர் சந்தித்தார்.
பொதுவாக பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்வது இல்லை. தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டது செய்தியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.